ஒருசமயம் வில்வ வனமாக இருந்த இப்பகுதியில் இடையன் மேய்த்த பசு ஒன்று ஒரு புதரில் சென்று பால் கறந்து விட்டு வந்தது. இதைக் கண்ட அவன், ஊர் மக்களிடம் சொல்ல, அவர்கள் புதரை சுத்தப்படுத்திப் பார்க்க, அங்கு சிவலிங்கம் ஒன்று இருப்பதைக் கண்டு கோயில் எழுப்பி வழிபட்டனர். அம்பிகையே ஞானம் தரும் வகையில் பாலை சுரந்தால் இத்தலத்து மூலவர் 'ஞானபுரீஸ்வரர்' என்றும், அம்பிகை பசுவாக வந்ததால் 'கோவர்த்தனாம்பிகை' என்றும் அழைக்கப்படுகின்றனர்.
சம்பந்தர் தல யாத்திரையாக சென்று கொண்டிருந்தபோது, இங்கு சிறிது நேரம் தங்கி ஓய்வெடுத்தார். அப்போது மாடு மேய்க்கும் இடையன் ஒருவன் அவரிடம் வந்து அருகில் ஒரு சிவன் கோயில் இருப்பதாகத் தெரிவித்து மறைந்தான். இறைவனே இடையனாக வந்ததை அறிந்த சம்பந்தர், இத்தலத்து மூலவரை 'இடைச்சுர நாதரே' என்று பாடினார். அதனால் இத்தலம் 'திருவிடைச்சுரம்' என்று வழங்கப்பட்டு பின்னர் மருவி தற்போது 'திருவடிசூலம்' என்று அழைக்கப்படுகிறது.
மூலவர் 'ஞானபுரீஸ்வரர்', 'இடைச்சுரநாதர்' என்னும் திருநாமங்களுடன் அழகிய லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். அம்பாள் 'கோவர்த்தனாம்பிகை', 'இமய மடக்கொடியம்மை' என்னும் திருநாமங்களுடன் தரிசனம் தருகின்றாள்.
விநாயகர், தட்சிணாமூர்த்தி, வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான், பைரவர், நவக்கிரகங்கள் ஆகிய சன்னதிகள் உள்ளன.
அம்பாள், கௌதம முனிவர், பிருங்கி முனிவர், சனத்குமாரர் முதலானோர் வழிபட்ட தலம்.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 7.30 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
|